விளக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலையம் சார்பாக விளக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி செல்வம் தலைமையில் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாக அலுவலர் ஸ்மித்தா, பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து போலீஸ் ஏட்டு மீனாட்சி வரவேற்று பேசிய பின் இன்ஸ்பெக்டர் சர்மிளா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சங்கீதா மணிமாறன், சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய முதன்மை பொருளாளர் மெர்லின் போன்றோர் பேசியுள்ளனர். இதில் பாரதமாதா சேவை நிறுவனங்களின் சார்பாக 10 பெண்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வடிவேல், இன்னர் வீல் சங்க தலைவி வினோதா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாஸ்கர், பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் உலகநாதன் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இவ்வாறு நடைபெற்ற நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜேந்திரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.