வேலூரில் தலைமை ஆசிரியர் உட்பட 4 பேரை கல்வி அலுவலர் இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள கஸ்பாவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையில் ஒற்றுமை இல்லாமல் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரனுக்கு புகார்கள் பெறப்பட்டது.
இதனையடுத்து அவர் விசாரணை மேற்கொண்டு பள்ளி மாணவர்களின் நலன் கருதி தலைமையாசிரியர் ரேவதியை மேல்பள்ளிப்பட்டு அரசு உயர்நிலைபள்ளிக்கும், பட்டதாரி ஆசிரியை சாந்தி மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், உடற்கல்வி ஆசிரியர் குமார் கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், ஓவிய ஆசிரியை கவிதா அணைக்கட்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இடமாற்றம் செய்ய கல்வி அலுவலர் குணசேகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்