பிரேசிலில் 4 வயதுடைய நினா என்ற சிறுமி தன் தந்தையுடன் சேர்ந்து ரியோடி ஜெனிரோ கடற்கரை பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை நீக்கி வருகிறார்.
தந்தை மற்றும் மகள் இருவரும் ஒரு சிறிய படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் பயணித்து அங்குள்ள குப்பைகளையும் அகற்றி வருகிறார்கள். இது தொடர்பில் சிறுமி கூறுகையில், கடலை தூய்மையாக வைக்க வேண்டும் என்ற நோக்கம் தந்தையிடமிருந்து ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் தன் தந்தை கோம்ஸ், கடல் மீதும் கடல்வாழ் உயிரினங்கள் மீதும் அதிக அன்பு கொண்டவர். கடல் வாழ் உயிரினங்கள் ஆரோக்கியத்துடன் வாழ கடலை காக்கவும் அதிகமாக முயற்சித்து வருவதாக கூறியிருக்கிறார்.
மேலும் சிறுமி கூறுகையில், பிளாஸ்டிக் வகைப் பொருட்கள் மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு அதிக பாதிப்பைத் தருகிறது. கடலில் கிடக்கும் குப்பைகளை நீக்கச்சென்ற சமயத்தில் சில உயிரினங்கள் பிளாஸ்டிக் பொருட்களின் வலைகளில் மாட்டிக் கொண்டு உயிருக்கு போராடுவது, வேதனையளிப்பதாக சிறுமி கூறியிருக்கிறார்.
இது குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், மகளும் தன்னுடன் சேர்ந்து பணியாற்றுவது, மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கடலின் நிலை பாதிப்படைவதால், அது உயிரினங்களையும் பாதிக்கிறது. மனிதர்கள் உபயோகிக்கும் பாலிதீன் பைகள் போன்றவை தான் இதற்கு காரணம். கடலை சுத்தமாக வைத்திருப்பது முக்கியமானது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.