ராமாயணா 3டி படத்தில் ராமனாக நடிக்க நடிகர் மகேஷ் பாபு மறுத்துள்ளார்.
தங்கல் படத்தை இயக்கி பிரபலமடைந்த நித்திஷ் திவாரி தற்போது ராமாயண கதையை ‘ராமாயணா 3டி’ என்ற பெயரில் படமாக்க இருக்கிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே சீதையாகவும், ஹிருத்திக் ரோஷன் ராவணனாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் ராமனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார். நடிகர் மகேஷ் பாபு தனக்கென தனிக் கொள்கைகளை கொண்டுள்ளார். அதாவது பிறமொழி படங்களிலும், ரீமேக் படங்களிலும் இவர் நடிப்பதில்லை. நடிகர் விஜய்யின் துப்பாக்கி திரைப்படம் மகேஷ் பாபுவுக்கு மிகவும் பிடித்த படம்.
இருப்பினும் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதால் துப்பாக்கி பட ரீமேக் வாய்ப்பு கிடைத்த போதும் அவர் நடிக்கவில்லை. அதேபோல் இவரது தந்தை பாதாள பைரவி படத்தை இந்த காலகட்டத்திற்கு ஏற்ப எடுத்து அதில் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க வேண்டும் என தனது விருப்பத்தை வெளியிட்ட போது அதையும் மறுத்துவிட்டார். தற்போது ராமாயணா 3டி படம் ஹிந்தியில் மட்டுமே தயாராவதால் இதில் நடிக்க முடியாது என மகேஷ் பாபு கூறியுள்ளார். மேலும் இவர் ராஜமௌலியின் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் ஒரு காரணம். இதனால் தற்போது ராமனாக நடிக்க படக்குழுவினர் வேறு நடிகர்களை தேடி வருகின்றனர்.