விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று முக ஸ்டாலின் அறிவித்தார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதியையும் அறிவித்தார். அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்தலும் , வாக்கு எண்ணிக்கை 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் நாங்குநேரியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றும் குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும், நாங்குநேரி தொகுதி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் அறிவித்தார். மேலும் விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக விருப்பமனு விநியோகம் நாளை மறுநாள் நடைபெறும் என்றும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் 24ம் தேதி அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.