அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து 95 சதவீத அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் எஞ்சியுள்ள படைவீரர்களும் வெளியேறி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் தீவிரமாகியுள்ளது. மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்ற தொடங்கியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் ஆதரவு ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு தொடரும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்துவரும் தொடர்ச்சியான உறவை பற்றி விவாதித்ததாகவும், ஜனாதிபதி ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு அமெரிக்கவின் ஆதரவு தொடரும் என உறுதி அளித்ததாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார்.