உளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிவில் சமூகத்தை உளவு பார்ப்பது தொடர்ந்து கவலையளிப்பதாக பெகாசஸ் விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 18-ஆம் தேதி சர்வதேச ஊடக கூட்டமைப்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பிரபல தேர்தல் யுக்தி நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஒரு நீதிபதி உள்ளிட்ட 300 பேருடைய செல்போன்கள் இஸ்ரேல் நாட்டின் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்க்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டது.
இந்த தகவலானது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு இந்த விவகாரத்தை தொடர்ந்து மறுத்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த பெகாசஸ் விவகாரம் அமெரிக்காவில் எதிரொலித்ததையடுத்து இந்திய நிருபர்கள் நேற்று முன்தினம் வாசிங்டனில் பேட்டியளித்த மத்திய மற்றும் தெற்கு ஆசிய விவகாரங்களுக்கான துணை மந்திரி டீன் தாம்சனிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அதில் அவர் பத்திரிக்கையாளர்கள், சிவில் சமூகம், ஆட்சி மீதான விமர்சகர்கள் ஆகியோருக்கு எதிராக உளவு தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது கவலை அளிப்பதாகவும், இது ஒரு பரந்த பிரச்சனையாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் உளவு தொழில்நுட்பம் பத்திரிக்கையாளர்கள், சிவில் சமூகம், ஆட்சி மீதான விமர்சகர்கள் ஆகியோருக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது. இதற்காக தாங்கள் குரல் கொடுத்துள்ளதாகவும், தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.