கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரண்டபள்ளி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு மினி வேனில் பூக்கள் பறிப்பதற்காக அகல கோட்டை கிராமத்திற்கு சென்றுள்ளனர். இந்த வேனை முருகேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மினி வேன் தம்மனட்டி அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சற்று ஓரம் ஒதுங்கியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்ததால் அதில் பயணித்த பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த தொழிலாளர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சாலையில் கவிழ்ந்த மினி வேனை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.