தமிழ்நாட்டை பொறுத்தவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்குழந்தைகளால் தங்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்டவற்றை வாயால் பேசி கேட்டு பெற முடியாது. இந்நிலையில் ஆட்டிசம் குழந்தைகளுக்கு உதவும் விதமாக அரும்புமொழி என்ற புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வதுடன், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் நெருக்கமானவர்களின் குரலை தேவையான புகைப்படத்துடன் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, உணவு தேவையெனில், அரும்புமொழி செயலியில் உள்ள உணவு படத்தை குழந்தை தொட்டால், குரல் ஒலிக்கும். இதனால் அவர்களது தேவையை பெற்றோர் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்த முடியும். குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சி குறித்தும், விளையாட்டு குறித்தும் இந்த செயலி மூலம் கற்பிக்க முடியும் என்கின்றனர் சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்கள். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பல்வேறு செயலிகள் இருந்தாலும் அதற்கு கட்டணம் வசூவிக்கப்படும் நிலையில், பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு அரும்புமொழி செயலி, இலவசமாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.