அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால் தான் சர்ச்சையானது என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் சர்ச்சையாக பேசியுள்ளார்.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த அதிமுக பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பேனர் வைக்க கூடாது என்று அறிவுறுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் தேமுதிகவின் விஜயகாந்த் மகன் குன்றத்தூரில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் விஜய் கூறியது அவரது சொந்த கருத்து. அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால் தான் சர்ச்சையானது என்றும் தனியார் பேனர் விழுந்திருந்தால் சர்ச்சை ஆகியிருக்காது என்றும் கூறினார். மேலும் தேமுதிக தலைமை கேட்டுக்கொண்டால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என்று பேசினார். சுபஸ்ரீ மரணத்தில் அதிமுக பேனர் தனியார் பேனர் என பிரித்து பேசியது பெரும் சர்ச்சையாக ஏற்படுத்தியுள்ளது.