முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனில் ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேசியதால் பாகிஸ்தான் அரசு கடும் கண்டம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் நெடுங்காலமாக பிரதமர் பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப் . இவர் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதால் பதவியை இழந்தார். இதனை அடுத்து இவர் 2019 ஆம் ஆண்டில் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்வதற்கு லாகூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்ததை அடுத்து லண்டனில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஹம்துல்லா மொஹிப்பை சந்தித்து பேசியுள்ளார். அதிலும் ஆப்கான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பாகிஸ்தானை விபச்சார விடுதி என்று கூறியதால் பாகிஸ்தான் அரசானது ஆத்திரமடைந்தது.இந்த நிலையில் தான் நவாஸ் ஷெரீப் அவரை சந்தித்து பேசியிருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவரின் மீதும் பாகிஸ்தானில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தற்போது உள்ள பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நவாஸ் ஷெரீப்பின் சந்திப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவத் சவுத்ரி பாகிஸ்தானின் எதிரிகள் அனைவரும் ஷெரீப்பின் தோழமை ஆவார்கள் என வன்மையாக கூறியுள்ளார். இந்த சந்திப்பானது சுயநலத்திற்கானதாகும் என்று மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரீன் மசாரி கூறியுள்ளார். இது குறித்து நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் கூறியதில் “எனது தந்தை நல்ல எண்ணத்திலேயே அண்டை நாட்டுடன் நட்புறவை மேற்கொள்ள பேசியிருப்பதாகவும் வேறு ஏதேனும் உள்நோக்கமும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொஹிப் அவரது டுவிட்டர் பதிவில் லண்டனில் நவாப் ஷெரீப் மற்றும் ஆப்கான் அமைச்சர் சாயித் சதத் நாதெரி ஆகியோருடன் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.