ஆளில்லா விமானங்களை ( ட்ரோன் ) ஜம்மு பகுதியில் பயன்படுத்தி வரும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
நேற்று செக்டார்களின் கமாண்டர்கள் அளவில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் எல்லை பாதுகாப்பு படைகள் இடையிலான கூட்டத்தில் எல்லையில் பயங்கரவாத நடவடிக்கைகள், பாகிஸ்தானின் ட்ரோன் பயன்பாடு, எல்லை நிர்வாகம் தொடர்பான இதர விவரங்கள், சுரங்கப்பாதைகள் அமைத்தல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் ஜம்மு பகுதியில் ட்ரோன்களை பயன்படுத்தி வருவது குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதேசமயம் நல்லிணக்கம் மற்றும் எல்லையில் அமைதி ஆகியவை நிலவ இரு தரப்பினரும் உறுதி எடுத்துக் கொண்டனர். மேலும் இரு தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை விரைந்து செயல்படுத்த தீர்மானித்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.