பல வங்கிகளில் கடன் பெற்று செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பணிக்கு சாதகமான பதில் வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் விஜய் மல்லையா. இவர் பல வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார். இவரின் பெயரில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் தொகை உள்ளது. இதனால் (CBI) குற்றப்பிரிவு துறை மற்றும் அமலாக்கத்துறை விஜய் மல்லையா மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவர் இங்கிலாந்தில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று கைது செய்யப்பட்டதுடன் லண்டன் உயர் நீதிமன்றம் மல்லையாவை நாடு கடத்தும் செயலுக்கும் உத்தரவிட்டது. இதனை அடுத்து ஜாமீனில் உள்ள விஜய் மல்லையா நாடு கடத்தும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டு வரும் நிலையில் அவர் இங்கிலாந்து நாட்டில் புகலிடம் கேட்டு விண்ணப்பம் ஒன்று அளித்துள்ளார்.
இந்த நிலையில் வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷன்வர்தன் ஷ்ரிங்கலா இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து சென்ற போது விஜய் மல்லையாவை நாடு கடத்தும் செயலுக்கு அங்கு ஆதரவான பதில் கிடைத்துள்ளதாக கூறினார். இதனை அடுத்து இங்கிலாந்து சென்று திரும்பிய அவரிடம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பணிகள் தாமதமாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதில் அவர் கூறியதாவது “விஜய்மல்லையாவை நாடு கடத்துவது குறித்த பணிகள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த வழக்குகள் சிறப்பான முறையில் தொடங்கவுள்ளது. அவரை நாடு கடத்தும் பணிக்கு உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மல்லையாவை நாடு கடத்த உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.