மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி இன்னும் கூட்டணி அமையாததால் யார் வெற்றி பெறுவார் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மராத்திய மாநிலத்தில் அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அது மத்தியிலும் எதிரொலிக்கும் என்பதால் மராட்டிய தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் , பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா ஆகிய நான்கு கட்சிகள் முக்கியமானவை.
288 இடங்களைக் கொண்ட மராத்திய சட்டமன்றத்துக்கு கடந்த முறை நடந்த தேர்தலில் இந்த நான்கு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. பாரதிய ஜனதா 122 இடங்களையும் , சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் 42 தொகுதிகளிலும் , தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சிவசேனா உடன் கூட்டணி அமைத்து தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே சமயம் கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா சிவசேனா கூட்டணி 47 இடங்களையும் , காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஐந்து இடங்களிலும் , மற்ற காட்சிகள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது.இரு கட்சிகளும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும். மற்ற தொகுதிகள் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.ஆனால் தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பாரதிய ஜனதா – சிவசேனா கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.