ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.
அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி தேர்தலை சந்திக்கும் மற்றொரு மாநிலம் அரியானா.இந்த மாநிலம் 1966 ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. ஹரியானாவின் தலைநகர் சண்டிகர் . இது பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராகவும் இருக்கிறது. 2014_ஆம் ஆண்டு வீசிய நரேந்திர மோடி அலையால் ஹரியானாவில் முதல் முறையாக பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 90 தொகுதிகளில் 47 இடங்களை பிடித்த பாரதிய ஜனதா மனோகர் லால் கட்டார் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.
இந்திய தேசிய லோக் தளத்துக்கு 19 தொகுதிகளும் , ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகளும், அரியானா ஜாங்கிட் கட்சி 2 இடங்களையும் , பகுஜன் சமாஜ் கட்சி , சிரோமணி அகாலிதளம் தலா 1 இடங்களையும் பிடித்தன. ஹரியானாவை பொருத்தவரை ஜாட் மற்றும் பட்டியலினத்தவர் 47 விழுக்காடு வாக்குகள் இருக்கின்றன.
இதனை எதிர் கட்சிகள் ஒன்றாக இணைந்து அறுவடை செய்ய முடியும் என்றாலும் எதிர்கட்சியான காங்கிரஸ் , இந்திய தேசிய லோக்தளம் , பகுஜன் சமாஜ் கட்சி JJP கட்சி ஆகியவையிடையே ஒற்றுமை இல்லாதது பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக இருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சிகள் ஆளுக்கொரு திசையில் பயணிப்பது ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.