கேரள மாநிலத்தில் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாவது சில நாட்களுக்கு முன் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது கேரள அரசின் கீழ் பணிபுரியும் அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பின் வரதட்சணை பெறவில்லை என்று உறுதி அளித்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் அனுபாமா வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள அரசின் கீழ் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் தாங்கள் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் வரதட்சணை கேட்கவோ, வாங்கவோ, வற்புறுத்தவோ இல்லை என்பதை குறிப்பிட்டு கையெழுத்திட்டு அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தில் அரசு ஊழியர், ஊழியரின் தந்தை, ஊழியரின் மனைவி, மாமனார் உள்ளிட்டோர் கையெழுத்திட வேண்டும்.
இந்த படிவங்களை அந்தந்த துறை தலைமை அதிகாரிகள் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் இருந்து பெற்று வருடத்திற்கு இரண்டு முறை (ஏப்ரல், அக்டோபர்) சம்மந்தப்பட்ட மாவட்ட வரதட்சணை தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிவிப்பில், வரதட்சணை கொடுப்பதோ, பெறுவதோ சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும். மேலும், இதற்கான சிறை தண்டனை 5 வருடத்திற்கு குறையாமல் இருக்கும் என்றும், ரூ.15,000க்கும் குறையாமல் அபராதம் விதிக்கப்படும் என்றும், அல்லது வரதட்சணைக்கு ஏற்ப அபராதம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.