ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதாக பிரபல ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படையினர் தலிபான்களுக்கு எதிரான போரில் ராணுவத்துக்கு உதவவும், ஆப்கன் அரசு படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தனர். மேலும் கத்தார் தலைநகர் தோஹாவில் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதன்படி கடந்த 2019-ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று இரு தரப்பினருக்கிடையே கையெழுத்தானது.
அதில் தலிபான்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை கைவிட விடவும், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை திரும்பப் பெறவும் ஒப்புக்கொண்டனர். அந்த வகையில் அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேற உள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து 95 சதவீத அமெரிக்க வீரர்கள் ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு பகுதிகளை கைப்பற்றி முன்னேறி வருவதோடு அங்கு தங்களது ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றனர். தலிபான்களின் இந்த செயலை தடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் அரசு பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக பிரபல ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.