வெள்ளத்தில் சிக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தற்போது மழை பெய்து வருவதால் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பழையாறு ஆற்றில் அதிகமாக தண்ணீர் ஓடுகிறது. இந்நிலையில் அதிகாலையில் இசக்கிராஜ் ஆற்றிற்கு சென்று மீன்பிடிப்பதற்காக வலையை விரித்துள்ளார். இதனையடுத்து மதியம் விரித்த வலையை எடுப்பதற்காக இசக்கிராஜ் தனது தந்தை முருகனுடன் ஆற்றிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இசக்கிராஜ் ஆற்றில் இறங்கி வலையை சுற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆற்றிற்குள் இருந்த இசக்கிராஜ் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். அதன்பின் வலையில் சிக்கி வெளியே வர முடியாமல் இசக்கி ராஜ் தண்ணீரில் தந்தையின் கண் முன்னே மூழ்கினார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முருகன் அபாய குரல் எழுப்பி கதறி அழுதார். இதனையடுத்து அருகிலுள்ளவர்கள் விரைந்து வந்து கடற்கரையில் திரண்டனர். அதன்பின் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் இசக்கிராஜை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதன்பின் 12 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புத் துறையினர் இசக்கிராஜின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனைப்பார்த்த இசக்கிராஜின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆரல்வாய்மொழி காவல்துறையினர் இசக்கிராஜின் சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.