அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்திலுள்ள இருக்கன்துறை பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனைப்பார்த்த டிரைவர் வேகமாக வந்த டிப்பர் லாரி நிறுத்தியுள்ளார். இதனால் அதன்பின் வந்த சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், அரசு பேருந்தும் அடுத்தடுத்து மோதின. இதில் டிப்பர் லாரி காவல்துறையினரின் மோட்டார் சைக்கிளில் மோதி சாலையோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது.
இதில் பேருந்தின் முன்பகுதி கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் டிரைவரான தியாகராஜன் மற்றும் பயணிகளான அமலன், மார்க்கோஸ், நவமி ஜெர்சி, மரிய ரென்சி, சகாயராணி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதனைப்பார்த்த அருகிலுள்ளவர்கள் பலத்த காயமடைந்த பயணிகளை மீட்டு தனியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.