பதாய் ஹோ பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.
பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ என்ற காமெடி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. சுமார் ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.220 கோடி வரை வசூல் செய்தது. தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்க இருக்கிறார்.
‘வீட்ல விசேஷங்க’ என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.