குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் பாரதிநகர் பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிதாஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காளிதாஸ் குளிப்பதற்காக திருப்பத்தூர் சிதளி குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது காளிதாஸ் மது அருந்தி விட்டு தண்ணீரில் இறங்கி குளிக்க சென்று நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அருகிலுள்ளவர்கள் குளத்தில் இறங்கி காளிதாசை தேடி பார்த்தனர். அப்போது குளத்தில் மூழ்கி காளிதாஸ் இறந்தது தெரியவந்துள்ளது.
அதன்பின் காளிதாசின் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காளிதாசின் சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.