நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நிறைவு பெற்றுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக நேற்று காலை 10 மணி முதல் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு அளித்து வந்தது. நேற்று வரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர்.
அதில் அதிகபட்சமாக நாங்குநேரி தொகுதியில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி அன்பழகன், கே ஆர் பிரபாகரன், விஜயகுமார், முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் உட்பட 18 பேரும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.பி ஆர்.லட்சுமணன் உட்பட 9 பேரும் விருப்பமனு பெற்றுள்ளனர். விருப்பமனுக்களை பூர்த்தி செய்து இன்று பிற்பகல் 3 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நிறைவு பெற்றுள்ளது. மொத்தமாக 90 விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று மாலை 3: 30 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி முன்னிலையில் மதுசூதனன் கேபி முனுசாமி உட்பட 9 பேர் கொண்ட ஆட்சி மன்றக்குழு நேர்காணல் நடத்த உள்ளது. மாலை 6 மணிக்கு வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.