கேரள மாநிலத்தில் கடந்த மாதம் மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல பெண்கள் தங்களுடைய வீட்டு வாசலில் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று பலகை வைத்தனர். ஒரு சிலர் சமூக வலைதளங்களிலும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் கேரளாவில் வரதட்சணை என்பது பெரும் பேசுபொருளாகவும், விவாதப் பொருளாகவும் மாறியதையடுத்து, கேரளாவில் உள்ள அரசு வேலை பார்க்கும் ஆண்கள் திருமணம் முடிந்தவுடன் தந்தை, மனைவி, மாமனாரிடம் இருந்து வரதட்சணை வாங்கவில்லை என்ற கையொப்பம் பெற்ற உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.