தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருகிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் சிஎஸ்ஆர் மூலம் தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு அனைவரும் உதவ முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.