பிரித்தானியா நாட்டில் அடுத்த பத்து ஆண்டுகளில் வெப்பநிலை அதிகமாகும் என்பதால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரும் என்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் வெப்பநிலையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவில் அதிக வெப்பநிலை பதிவாகி மக்கள் இறக்கும் மோசமான நிலை உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இங்கிலாந்தில் காலநிலை மாற்றத்தால் வெப்பம் 40 டிகிரிக்கு மேல் பதிவாகி பொருளாதாரம், போக்குவரத்து மற்றும் நீர் பற்றாக்குறை போன்றவை ஏற்படும் என்றும் கூறியுள்ளனர். இனி வரப்போகும் 10 ஆண்டுகளில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசும் என்று ஆராய்ச்சியாளர் Chloe Brimicombe தெரிவித்துள்ளார்.
இதனால் தெற்கு இங்கிலாந்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். அது மட்டுமின்றி வெப்ப நாடுகளைப் போல நம் ரயில் சேவைகள் உருவாக்கப்படவில்லை என்பதால் அதிலும் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த வெப்ப அலை காரணமாக தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும், உற்பத்தி திறன் வீழ்ச்சியடையும், பயிர்கள் மற்றும் கால்நடைகளை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் பிரித்தானியாவை கடந்து 2019 ஆம் ஆண்டு ஜூலையில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.