தேனி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்ட உரிமையாளரின் வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஆங்கூர்பாளையம் சாலை தெருவில் தியாகராஜன்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தகமாக கேரளாவில் ஏலக்காய் தோட்டம் உள்ளது. இந்நிலையில் தியாகராஜன் அவரது குடும்பத்துடன் கடந்த 11 ஆம் தேதி கேரளவுக்கு சென்று ஏலக்காய் தோட்டத்தில் தங்கியிருந்துள்ளார். இதனையறிந்த மர்மநபர்கள் சிலர் தியாகராஜன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 2 பவுன் நகை மற்றும் 4,000 ரூபாயை திருடி சென்றுள்ளனர்.
இதனையடுத்து நேற்று காலையில் வீட்டின் பூட்டு உடைத்திருப்பதை பார்த்த அவரது உறவினர் செல்வராஜ் உடனடியா தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனடியாக கம்பத்திற்கு விரைந்து வந்துள்ளார். மேலும் கம்பம் தெற்கு காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.