பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த முதலையை மீனவர்கள் பிடித்து விட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள குலவடையான் கிராமத்தில் சித்தேரி என்ற குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குளத்தில் இருந்த முதலை இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் குளத்தில் கிடந்த முதலையை இரண்டு நாட்களாக கண்காணித்துள்ளனர். ஆனால் முதலை குளத்திலிருந்து வராததால் வனத்துறையினர் பொதுமக்களிடம் அது வெளியே வந்தால் உடனடியாக தகவல் அளிக்கும் படி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 5 மீனவர்கள் வலை மூலம் குளத்தில் கிடந்த முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 200 கிலோ எடையும், 6 அடி நீளமும் உடைய முதலை மீனவர்களின் வலையில் சிக்கி விட்டது. இதனை தொடர்ந்து வனதுறையினர் அந்த முதலையை பத்திரமாக மீட்டு சரக்கு வாகனத்தில் கொண்டு சென்றனர். அதன் பிறகு அந்த முதலையை அணைக்கரை கீழணையில் இருக்கும் தண்ணீரில் விட்டனர்.