தாய் யானையின் இரண்டு நாள் பாச போராட்டத்துக்கு பிறகு இறந்த குட்டி யானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள செம்ம்பாலா பகுதியில் கடந்த 23-ஆம் தேதி காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளது. அப்போது திடீரென சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தாய் யானை உள்பட சில காட்டு யானைகள் இறந்த குட்டி யானையின் உடலை சுற்றி நின்று கொண்டிருந்தது. மேலும் அந்த காட்டு யானைகள் வனத்துறையினரை ஓட ஓட விரட்டியுள்ளது.
இதனையடுத்து வனத்துறையினர் மீண்டும் இறந்த குட்டி யானையின் சடலத்தை மீட்க முயற்சி செய்த போது தாய் யானை அதனை தடுத்துள்ளது. இதனால் குட்டி யானையின் உடலை மீட்கும் பணி இரண்டு நாட்கள் தாமதமானது. இந்நிலையில் 3-வது நாளாக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது குட்டி யானையின் உடலை விட்டு நீண்ட தொலைவில் தாய் யானை சோகத்துடன் நின்றுகொண்டிருந்தது. அதன்பின் சேற்றில் சிக்கி இறந்த குட்டி யானையின் உடலை வனத்துறையினர் கயிறு கட்டி மீட்டுள்ளனர்.
இதனை பார்த்ததும் வனத்துறையினரை நோக்கி ஓடி வந்த தாய் யானையை அவர்கள் விரட்டியடித்தனர். அதன் பிறகு மருத்துவ குழுவினர் இறந்த ஒரு வயதுடைய ஆண் குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சேற்றில் சிக்கி தண்ணீரில் நீண்டநேரம் நின்றதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குட்டியானை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.