கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதலே நாடு பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கும், வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதற்கும் ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிட வேண்டும் என்று பலரும் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிடும் திட்டம் ஏதாவது உள்ளதா? என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் அதற்கு பதில் அளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் இல்லை.
2020-21-ம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீத வீழ்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்றின் இணையற்ற விளைவையும், தொற்றுநோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் இந்த வீழ்ச்சி பிரதிபலிக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியதைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் இந்த பதிலை அவர் தெரிவித்துள்ளார்.