அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 3 மணி வரை விருப்பமனு கொடுக்கப்பட்து. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், மதுசூதனன், கேபி முனுசாமி உட்பட 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழு நேர்காணல் நடத்தியது. முதல்வர் பழனிசாமி அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை என்றும், பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. நேர்காணல் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில், நாளை காலை நாங்குநேரி விக்கிரவாண்டி காமராஜர் நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என்று துணைமுதல்வர் ஓபிஎஸ்தெரிவித்தார். மேலும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.