மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள சிங்கிபுரம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அஜித் குமார் என்ற மகன் இருக்கின்றார். இவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அக்கரையம்பாளையம் பகுதியில் வசிக்கும் அருண் என்பவரும் நண்பர்களாவார்கள். இந்நிலையில் அஜித் குமார் மற்றும் அருண் ஆகிய 2 பேரும் இணைந்தது பழனிக்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் மகுடஞ்சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. இந்த விபத்தில் அஜித்குமார் மற்றும் அருண் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த அருண் மற்றும் அஜீத் குமாரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து ஏற்பட்ட வழியாக சென்ற மற்றொரு காரில் இருந்த கேமராவின் மூலம் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரை ஓட்டிச் சென்ற நபர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரான சதீஷ்குமார் மற்றும் உரிமையாளரான வினோத் ஆகிய 2பேரையும் கைது செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சங்ககிரியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று கையில் கயிறு கட்டிக்கொண்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில் வழியிலே மது அருந்திவிட்டு போதையில் முன்னால் சென்ற காரை முந்திச் செல்வதற்காக வேகமாக இயக்கிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களுடன் இருந்த கௌதம் ராஜ் மற்றும் அருண்குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.