புழுதி புயலால் வாகனங்கள் ஒன்றன் மேல் ஒன்று வரிசையாக மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் கனோஸ் நகரில் நீண்ட நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வீசிய பலத்த காற்றால் புழுதிப் புயல் உருவானது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு முன் நிற்கும் வண்டிகள் புலப்படாமல் போனதால் வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று முன் நின்ற காரின் மீது மோதியது.
இதனை தொடர்ந்து லாரிக்கு பின் வந்த வண்டிகள் தொடர்ச்சியாக ஒன்றன் மேல் ஒன்று மோதியதில் 22 வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று அலபாமா மாகாணத்தில் புழுதி புயலால் 15 வாகனங்கள் வரிசையாக மோதி 10 பேர் பலியான சம்பவம் குறிப்பிடத்தக்கது.