தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்துணவு மாணவர்களுக்காக அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்கவும், சத்துணவு மாணவர்களுக்கு சமைத்த உணவைத் தர கோரும் வழக்கில் அரசியல் திட்டம் பற்றி அறிக்கை தரவும் ஆணை பிறப்பித்துள்ளது.