போலீஸ் போல் நடித்த மர்மநபர்கள் ஆசிரியையிடமிருந்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் சந்திரசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஷீபா ஜோசப் என்ற மனைவி இருக்கின்றார். இவர் பண்ணைவிளை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஷீபா ஜோசப் தூத்துக்குடி செல்வதற்காக கந்தசாமிபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று ஷீபா ஜோசபிற்கு முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு அவர்களில் பச்சை நிற தொப்பி அணிந்து இருந்தவர் அவரிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசி இவ்வாறு நகைகளை அணிந்துகொண்டு செல்லக்கூடாது என்று நகைகளை கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி விட்டனர்.
இதனையடுத்து ஷீபா ஜோசப்பை அவர்கள் நிறுத்தி பச்சை நிற தொப்பி அணிந்து இருந்தவர் தான் போலீஸ்காரர் என்று அறிமுகம் செய்து கொண்டு எங்கே செல்கிறீர்கள் எதற்கு இவ்வளவு நகை அணிந்து இருக்கிறீர்கள் என்று ஆங்கிலத்தில் கேள்விகளைக் கேட்டுள்ளார். இதனால் பயந்து போன ஷீபா ஜோசப் இவர்கள் உண்மையான போலீஸ் என்று நம்பி உடனடியாக தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் வளையல்கள் என 12 பவுன் தங்க நகைகளை கழற்றி தனது பர்சில் வைத்தபோது அவர்கள் இவரை செல்லும்படி கூறி அனுப்பி விட்டனர்.
அதன் பிறகு சிறிது தூரம் சென்றவுடன் ஷீபா ஜோசப் தனது நகைகள் இருக்கின்றதா என பர்சை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது தான் ஷீபாஜோசபிற்கு அவர்கள் போலீஸ் போல் நடித்து தன்னிடமிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்து ஷீபா ஜோசப் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து அந்த மர்ம நபர்களை கண்டுபிடித்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.