Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஆதரிக்க யாருமே இல்ல” வழக்கறிஞர் மகளுடன் எடுத்த முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

வழக்கறிஞராக பணிபுரிந்த பெண் தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரியும் கீதாஞ்சலி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது மகள் சிவரஞ்சனியுடன் கீதாஞ்சலி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர்களை விட்டுப் பிரிந்து மன உளைச்சலில் இருந்த கீதாஞ்சலி தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கீதாஞ்சலியின் வீட்டிற்கு சென்ற அவரது தங்கை ராஜி நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார். ஆனாலும் கதவை திறக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வெளியே நின்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் கீதாஞ்சலி அழைப்பை ஏற்கவில்லை. அதன்பின் ராஜி அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கீதாஞ்சலி மற்றும் சிவரஞ்சனி ஆகிய இருவரும் தூக்கில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் கீதாஞ்சலி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த கடிதத்தில் எங்களை ஆதரிக்க யாரும் இல்லாததால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என எழுதியுள்ளார். மேலும் நல்ல குடும்ப வாழ்க்கை அமையவில்லை என்றால் இந்த துன்பம் தான் நேரிடும் என கீதாஞ்சலி அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |