கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிபுதூர் பகுதியில் சேது ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சேது ராஜாராம் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நீலிகோணம்பாளையம் பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்பவருடன் சௌந்தர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த சேது ராஜாராம் தனது மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் இரவில் சௌந்தர்யா தனது கள்ளக் காதலனான குணசேகரனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அதன் பின் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சேது ராஜாராமின் கழுத்தை குணசேகரனும், சௌந்தர்யாவும் அறுத்துள்ளனர்.
அப்போது வலி தாங்க முடியாமல் அலறி துடித்த சேதுராமனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சேதுராமனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடையே தனது கணவர் கீழே விழுந்து காயமடைந்ததாக சௌந்தர்யா நாடகமாடியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலனுடன் இணைந்து சௌந்தர்யா தனது கணவரை கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது. அதன்பின் சௌந்தர்யா மற்றும் குணசேகரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.