கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் பகுதியில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மகள் இருந்துள்ளார். இந்த பெண்ணிற்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் மனைவி தன்னை விட்டு பிரிந்ததால் மன உளைச்சலில் இருந்த முனிரத்தினம் கடந்த மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து நிர்மலாவிற்கு யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து தனது கணவர் இறந்ததை அறிந்த நிர்மலா மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிர்மலாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.