கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீசை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
முதலில் கே.ஜி.எப்-2 படத்தை ஜூலை 16-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கே.ஜி.எப்-2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.