கோவில் பூசாரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் அதே பகுதியில் வசிக்கும் ராசு என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ராசு கோவிலுக்கு அருகில் இருக்கும் புறம்போக்கு இடத்தை திருவிழா நிகழ்ச்சிக்காக பயன்படுத்தி வந்துள்ளார். இந்த இடத்தை அதே பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக ராசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளார்.
ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த ராசு செல்போன் டவரில் ஏறி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராசுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின் ராசு செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சுதாகரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது சுதாகர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதன்பின் காவல்துறையினர் இருவர் தரப்பிலும் சமாதான கூட்டம் ஏற்பாடு செய்து விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுதாகர் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சுதாகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.