மொபட் மீது வேன் மோதிய விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுண்டன்புதூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனோன்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1\2 வயது குழந்தையான சஞ்சய் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் கணேசன் தனது மொபட்டில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோபியில் உள்ள ஹோட்டலில் உணவு வாங்கிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து குள்ளம்பாளையம் பிரிவு அருகே கணேசன் சென்று கொண்டிருந்தார். அப்போது தொழிலாளர்களை ஏற்றி வந்த தனியார் தொழிற்சாலை வேன் ஒன்று கணேசன் மொபட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் மொபட்டில் இருந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் கணேசனின் கண்ணெதிரே மனோன்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப்பார்த்த அருகிலுள்ளவர்கள் பலத்த காயமடைந்த கணேசன் மற்றும் குழந்தை சஞ்சயை உடனடியாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய வேனின் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் வேனின் கண்ணாடிகள் நொறுங்கின. ஆனால் அங்கிருந்த தொழிலாளர்களுக்கு காயம் ஏற்படாமல் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனோன்மணியின் சடலத்தை கைப்பற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.