தேனி மாவட்டத்தில் முன் விரோதம் காரணமாக மீன் கடையின் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ஜக்கம்பட்டி சீதாராம்தாஸ் நகரில் ஜாகீர் உசேன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆண்டிபட்டியில் மீன்கடை .இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். அந்த விபத்தில் ஜாகீர் உசேனின் கை மற்றும் கால்களில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஜாகீர் உசேனை மீட்டு தேனி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் அவரது நண்பர்கள் இணைத்து இந்த தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. அதில் நவீனை பிடித்து போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் உண்மை சம்பவம் தெரியவந்துள்ளது. அந்த விசாரணையில் நவீனின் தந்தை அர்ஜுனன் மீன் கடை வைப்பதற்காக ஜாகீர் உசேனின் மனைவியிடம் இருந்து 50,000 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் அர்ஜுனன் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது.
இதனால் ஜாகீர் உசேன் மற்றும் அர்ஜுனனுக்கு முன்விரோதம் இருந்து வைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த முன்விரோதம் காரணமாக அர்ஜுனனின் மகன் நவீன் மற்றும் அவரது நண்பர்களான குள்ளப்புரத்தை சேர்ந்த மணி(20), சக்கம்பட்டியை சேர்ந்த கண்ணன்(32), மேலத்தெருவை சேர்ந்த ஹரிஹரசுதன்(19) உட்பட 6 பேர் இணைந்து ஜாகீர் உசேனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனையறிந்த காவல்துறையினர் அவர்கள் 4 பேரை உடனடியாக கைது செய்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.