தடை செய்யப்பட்ட புகையிலை தயாரித்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததோடு உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள சண்முக நகர் பகுதியில் பால கார்த்திகேயன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாகவே பால கார்த்திகேயன் தனது குடோனில் வாசனையுடைய புகையிலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் பால கார்த்திகேயன் குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால கார்த்திகேயனின் குடோனில் சோதனை செய்துள்ளனர்.
அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பிறகு அதிகாரிகள் புகையிலை தயாரிப்பதற்கு பயன்படுத்திய அரோமேட்டிக் திரவம், ரசாயனம், பாக்கு சீவல், ஏலக்காய் மற்றும் தயாரித்த புகையிலையை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் பால கார்த்திகேயனின் குடோனுக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தயாரித்த குற்றத்திற்காக பால கார்த்திகேயனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.