ஆட்டோவில் சென்ற பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் கருப்புசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிரைவரான கனகராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவர் கீழமுடிமண் பகுதியில் வசிக்கும் மக்களை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு கொண்டு சென்று இறக்கி விடுவது வழக்கம். இந்நிலையில் கனகராஜ் தனது ஆட்டோவில் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு கே. சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் திடீரென கனகராஜின் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.
அதன்பிறகு அந்த மூன்று வாலிபர்களும் ஆட்டோவில் இருந்த பயணிகளிடம் திடீரென வழிப்பறி செய்ய முயற்சி செய்ததை அறிந்தவுடன் அவர்களை தடுத்து நிறுத்தி பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் மற்றும் பயணிகள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் காவல்துறையினர் நிற்பதைப் பார்த்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.
அதனால் சிறிது தூரத்திலேயே மோட்டார் சைக்கிளை திரும்பும் போது திடீரென நிலை தடுமாறி 3 வாலிபர்கள் கீழே விழுந்து விட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் பெரியசாமி நகர் பகுதியில் வசிக்கும் சீனு, ஜெகன்குமார் மற்றும் பாண்டி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வாலிபர்கள் மூன்று பேரும் இணைந்து கனகராஜ் ஆட்டோவில் சென்ற பயணிகளிடம் வழிப்பறி செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சீனு, ஜெகன்குமார் மற்றும் பாண்டியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.