ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக சோழவரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஜோதி நகர் பகுதியில் வசித்த சண்முக பாண்டியன் என்பதும், இவர் வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடி என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சண்முக பாண்டியனை கொலை செய்த நபர்களை குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சண்முக பாண்டியனை கொலை செய்த குற்றத்திற்காக நாரவாரிகுப்பம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன், வேலு ஆகிய 2 வாலிபர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.