தேனி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்த அரசு பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு வடகரையை சேர்ந்த மகேந்திரன்(59) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேந்த 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஆபாச படங்களை காண்பித்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் உஷா தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மகேந்திரன் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உத்தரவிட்டுள்ளார்.