தார்சாலை அமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து நெல் குத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தபால் தந்தி காலனி பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து சங்கத் தலைவர் கார்த்திக் தலைமையில் நெல் குத்தும் நூதன போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாதர் சங்க கமலம், மாவட்ட செயலாளர் முத்து மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தபால்தந்தி காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாகவே தார்சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாமலும் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் சிலர் சாலையின் குழியான பகுதியில் நெல்மணிகளை கொட்டி அதனை குத்திக்கொண்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.