மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான ராமர் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்துப்பாண்டி என்ற மகனும், ஆனந்தி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் ராமரின் உறவினரான சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். மேலும் உறவினரான இவர்கள் இருவருக்கும் வேலைக்கு சென்று விட்டு மாலையில் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பேச்சியம்மன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் வைத்து இவர்கள் இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சுடலை, ராமர் வைத்திருந்த மது பாட்டிலை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றி இருவருக்குமிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கிணற்று சுவர் மீது உட்கார்ந்திருந்த ராமரை ஆத்திரமடைந்த சுடலை அவரை பிடித்து கிணற்றுக்குள் தள்ளியிருக்கிறார். இதனால் கிணற்று சுவரில் மோதி பலத்த காயத்துடன் ராமர் தண்ணீருக்குள் மூழ்கினார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கிணற்றில் விழுந்த ராமரை காப்பாற்றும் படி சத்தம் போட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூலைக்கரைப்பட்டி காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்து என்ன பிரச்சினை என்று கேட்டபோது சுடலை ராமரை கிணற்றுக்குள் தள்ளி விட்டது தெரிய வந்துள்ளது.
அதன்பின் சுடலையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மோட்டார் மூலம் கிணற்று தண்ணீரை வடிய வைத்து தேடியபோது ராமர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் ராமரின் சடலத்தை கிணற்றிலிருந்து மீட்டு கால்துறையினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள சுடலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.