தோட்டக்கலை பண்ணைக்கு வேலைக்கு வந்த தொழிலாளி தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருங்குளம் பகுதியில் தோழப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 30 வருடங்களாக அதே பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தோழப்பன் தோட்டக்கலை பண்ணைக்கு வழக்கம் போல் இரவு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதிகாலையில் தோட்டக்கலை பண்ணையில் வேலை செய்ய வந்தவர்கள் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தோழப்பன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலைக்கு வந்தவர்கள் வல்லம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வல்லம் காவல்துறையினர் தண்ணீர் தொட்டியில் மிதந்த தோழப்பனின் சடலத்தை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தோழப்பனின் மகன் வினோத் என்பவர் வல்லம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தோழப்பன் தற்கொலை செய்தாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.