குண்டு மைக்கை இன்றளவும் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன் என மைக்செட் மணி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியில் மணிகூண்டு என்ற மணி வசித்து வருகின்றார். இவர் 1963-ஆம் ஆண்டு முதலே மைக்செட் தொழிலை செய்து வந்துள்ளார். இந்த தொழிலுக்காக 16 வயது முதலே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். இதனால் இவரை அப்பகுதி மக்கள் மைக்செட் மணி என்று அன்பாக அழைத்து வருகின்றனர். இந்நிலையில் இவர் அமெரிக்காவின் தயாரிப்பான குண்டு மைக்கை அப்போதே 135 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாக்கள், அரசியல் நிகழ்வுகள் நாடகம் உள்ளிட்டவைகளுக்கு மைக்செட் மணியை தான் அனைவரும் அழைப்பார்கள். இதுபற்றி மைக்செட் மணி கூறும்போது என்னுடைய குண்டு மைக்கில் அண்ணா ஒருமுறை பேசியபோது குரல் கனீரென ஒலித்ததாக பாராட்டியுள்ளார் எனவும், தி.மு.க கட்சி பாடகர் நாகூர் ஹனிபா ஒரு முறை மைக்கில் பேசிவிட்டு மைக்கிற்கு முத்தம் கொடுத்து என்னை பாராட்டி சென்றார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இத்தகைய பெருமை வாய்ந்த என்னுடைய குண்டு மைக்கை இன்றளவும் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன் என மைக்செட் மணி தெரிவித்துள்ளார்.