மர்ம விலங்கு 6 கோழிகளை கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு ஒன்று 2 நாய்கள் மற்றும் 12 கோழிகளை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் கோழிகளை வளர்த்து வந்தனர். இதில் சில கோழிகள் கூண்டிலும், மற்றவை கொய்யா மரத்திலும் தங்கி விடும். இந்நிலையில் கோழிகளை கூண்டிலிருந்து திறந்து விடுவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது 6 கோழிகள் காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இதில் சில கோழிகளுக்கு தலை இல்லாமலும், கால்கள் இல்லாமலும் இறந்து கிடந்தது. அது மட்டுமல்லாமல் அடை காத்துக் கொண்டிருந்த கோழி இறந்தும், குஞ்சு பொரிக்கும் தருவாயில் உள்ள முட்டைகள் உடைந்தும் கிடந்தன. இதுகுறித்து முருகன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் மர்ம விலங்கின் காலடித்தடம் பதிந்திருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
அதன்பின் அந்த தடத்தை வனத்துறையினர் சேகரித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, இந்த கோழிகளை கொன்றது காட்டு பூனையாக இருக்கலாம் என்றும், அது கோழிகளின் தலை மற்றும் கால்களை மட்டும் கடித்து தின்று விட்டு உடலை சாப்பிடாமல் அப்படியே போட்டு விடும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் மர்ம விலங்கின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ளனர். எனவே பொதுமக்கள் மர்ம விலங்கை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.